காந்தியின் புகைப்படம்


"என் மன உறுதியை நான் இழக்க மாட்டேன்.   அவர்களால்          அதிபட்சமாக என்ன செய்ய முடியும்?  என்னைக் கொல்லலாம்.      அவ்வளவே"
                                                                                                                                             - மகாத்மா காந்தி.

பேச்சு எங்கெங்கோ திசை மாறி காந்தியில் 'ல்' மேல் உள்ள முற்றுபுள்ளியின்  மேல் மையம் கொண்டது. "காந்தி நம்ம ராமகிருஷ்ண வித்யாலயத்துக்கு வந்திருக்கார் தெரியுமா?" என கேட்டார் என் தந்தை. காந்தி இந்தியா முழுக்க சுற்றியிருக்கிறார் என்றாலும் என் வீட்டிலிருந்து நடந்தால் ஐந்து நிமிட தொலைவில் உள்ள இடத்திருக்கு அவர் வருகை தந்திருக்கிறார் என்பதை அறிய ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. "அப்படியா?" என்றேன். "பின்ன, ஆபீஸ் எதுக்கவே போட்டோ மாட்டியிருக்காங்க.நீ கவனிக்கலையா? இந்த வித்யாலத்த தொறந்து வச்சதே அவர்தான்" என்றார்.பள்ளிக் காலங்களில் ராமகிருஷ்ணா வித்யாலயா சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை, "இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டதா?" என்பது தலைப்பு. தலைப்பில் 'உண்மையிலேயே' என்ற வார்த்தையை முக்கியமானதாக கருதி எதிர்மறையாக பேசினேன். ஆனால் நேர்மறையாக பேசிய மூவருக்கே பரிசு வழங்கப்பட்டது. அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் மொத்தமே மூன்றுபேர் தான் இந்தியா உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டது என சத்தியம் செய்தார்கள். மதிப்பெண்கள்  வழங்கிய மூவருள் ஒருவர் இறுதியாக "அதெப்படி சுதந்திரம் கிடைக்கலன்னு பேசலாம்? காந்தி அதுக்காகத் தான போராடினார்? உசுரையும் விட்டாரு? என்னால சுதந்திரம் கிடைக்கலங்கறத ஏத்துக்க முடியாது" என்றார்.

எனக்கு அந்த புகைப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என பரபரத்தது. காவலாளி 'யார பாக்கணும்? எனக் கேட்டார். 'காந்தியின் புகைப்படத்தை' என்று சொல்ல கூச்சமாக இருந்தது.'பள்ளி ஆசிரியர் ஒருவரைப் பார்க்க ' என பொய் சொல்லி உள்ளே நுழைந்தேன்.அப்போது தான் பள்ளி, ஆசிரமம், தொழில்நுட்பக் கல்லூரி என பலதும் ஒரே கூரையின் கீழ் இங்கு இயக்கப்படுகிறது என்பது ஞாபகம் வந்தது. எந்த அலுவலகத்தில் என தெரியாமல் தேடவும் முடியாது. முதலில் பள்ளியிலுள்ள  அலுவலகத்தில் பார்க்கலாம் என முடிவு செய்தேன்.பள்ளி தலைமை ஆசிரியரின் அலுவலக வரவேற்பறையின் முன் மாட்டப்பட்டிருந்தது! காந்தி வெற்றுடம்பில்தான் இருந்தார். கண்ணாடி அணிந்திருக்கவில்லை. கம்பீரமும் அல்லாத தளர்வும் அல்லாத நிமிர்வில் நின்றிருந்தார்.காந்திக்கு வலப்புறம் கைகளை மரியாதை நிமித்தமாக தன் மணிக்கட்டில் கோர்த்திருந்தவர் திரு.அவினாசிலிங்கம் என படச் சட்டகத்தின் கீழிருந்த குறிப்பு மூலம் அறிய முடிந்தது.கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம். ஆனால் வித்யாலயத்தின் தொடக்க விழாவுக்கு  காந்தி வந்ததாக அதில் குறிப்பேதும் இல்லை.

'ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' நூலை ஜெயகாந்தன் காந்தியவாதிகளுக்கும் மார்க்சசியவாதிகளுக்கும் சமர்ப்பணம் செய்திருப்பார். பின்னவர்களுக்கு தன் நூலை ஜெயகாந்தன் அர்ப்பணம் செய்ததை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சமூக அநீதிகளுக்கு எதிரான பெருங்கோபம் கொண்ட மனிதராகவே அப்போது அவரை அறிந்திருந்தேன். அதனால் பதின் வயதில் காந்தியவாதிகளுக்கு ஜெயகாந்தன் ஆதரவானவர் என்பதை அறியவே ஆச்சரியமாக இருந்தது. பிறகுதான் அவர் எழுதிய 'ஈஸ்வர அல்லா தேரே நாம்' வாசித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை காந்தியை பற்றி அறிந்து கொள்வதில் சலிப்பேதும் ஏற்படவில்லை. இந்திய தலைவர்களில் எவரையும் ஒரு சராசரி இந்தியன் அறியாமல் வாழ்ந்து மடியலாம்.ஆனால் காந்தியை, நேர்மறையாகவோ/எதிர்மறையாகவோ, அறிந்து கொள்ளாமல் இருக்கவே முடியாது என்றே தோன்றுகிறது. இனிவரும் காலங்களில் கூட காந்தியை கடந்துதான் நம் அடுத்தடுத்த தலைமுறைகளின் பயணம் நிகழும். 

புகைப்படத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது புன்னகை மேலும் விரிவடைவது போலிருந்தது.இந்த மனிதரையா சுட்டுக் கொன்றான்? திடீரென்று அந்த சந்தேகம் கிளர்ந்தெழுந்தது. காந்தியின் மார்பை துளைத்த மதவெறிக்கு ஆதரவான துப்பாக்கி குண்டு என்னானது? மார்பை துளைத்தவுடன் உடம்பில் இருந்து வெளியேறிவிட்டதா? அல்லது இப்போதும் நம்மை பீடித்திருக்கும் மதம் போல அவரது உடம்பிலேயே தங்கி விட்டதா? அது அவரது உடம்பில் இருந்து நீக்கப்பட்டதா? நீக்கப்பட்டதெனில் அது தற்போது பாதுகாக்கப்படுகிறதா? காந்தியின் உடம்போடு சேர்த்து அதுவும் எரிக்கப்பட்டதா? என்னானது அத்தோட்டா ?

'என்ன சார்?' என்ற குரல் கேட்டு திரும்பினேன். கேட்டவர் தலைமையாசிரியராக இருக்க வேண்டும். எளிமையாக இருந்தார். ஃபிரேம் கண்ணாடிக்குப் பின் ஒளிந்திருந்த சின்ன கண்கள்.  எங்கோ புறப்பட்டவர் போலிருந்தது. 'என்னைப் பாக்க வந்தீங்களா? என்ன வேணும்?' என்றார். நான் தயங்கி, "இல்ல சார். காந்தியோட இந்தப் படத்தை பாக்க வந்தேன்" என்றேன். அந்தப் படத்தை பார்த்தார். சரி என்பதுபோல தலையாட்டிவிட்டு சென்றார். என்னைக் கடக்கும் போது அவர் புன்னகைத்தது போல தான் இருந்தது.


காந்தி இன்று தளத்தில் 

2 comments:

suneel krishnan 17 March 2013 at 08:33  

கோகுல்..
இப்படி எதாவது எழுதுனா தயவு செய்து எனக்கொரு லிங்க் அனுப்புங்க:) நான் இதை காந்தி தளத்திற்கு எடுத்துகொள்கிறேன்..எழுத்துல அபார தேர்ச்சி..வாழ்த்துக்கள்..

Gokul Prasad 17 March 2013 at 09:07  

திரு.சுநீல் கிருஷ்ணன், மிக்க நன்றி. தியாகிகள் தினத்துக்காக எழுதினேன். இன்னும் 50 பேர்கூட இதை வாசிக்கவில்லை. உங்கள் தளத்தில் பதிவேற்றினால் பல நல்ல வாசகர்களை இப்பதிவு சென்றடையும். பதிவின் உரலிகளை தனிப்பட்ட முறையில் பகிர்வது குறித்து தயக்கமும் சங்கடமும் எனக்குண்டு. என் எழுத்தின் மீதான ஐயம்தான் அதற்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன். நிச்சயமாக அடுத்த முறை உங்களுக்கு லிங்க் அனுப்புகிறேன். நன்றி:-)

Followers

Total Pageviews

தமிழ்ப் புள்ளி

About this blog

கோகுல் பிரசாத். Powered by Blogger.