கனவுகளின் பரமபத பாதைகள்

கடல் எனக்கு எப்போதும் பிரியமான ஒன்றாகவே இருந்திருக்கிறது டாக்டர். இப்போது போல எப்போதும் பயம் பீடித்து அலைந்ததில்லை.


நேற்றிரவும் அந்தக் கனவு மறுபடியும் வந்ததா?


அதே கனவா என்பது புரியவில்லை. ஆனால் அதே போன்றதொரு மஞ்சள் வாத்தை பார்த்தேன். கடல் ரத்தம் போல என் மீது சொட்டிக்கொண்டே இருக்கிறது. நான் நகராமல் நிற்கிறேன். வாத்தின் உருவம் பெரிதாகிக் கொண்டே இருந்தது.

நான் அழ ஆரம்பித்து விட்டேன். இசை கேட்கிறீர்களா என டாக்டர் கேட்டார். சரி என்றேன். பழைய கிராமபோனில்  கேட்பது பிடிக்கும் என இரண்டு அமர்வுகளுக்கு முன் சொல்லி இருந்தேன். ஹங்கேரிய இசைத் துணுக்கை காற்றில் நழுவ விட்டார். கனவுகளாலும் தூக்கமின்மையாலும் அவதிப்பட்டு வந்ததால் ஆலோசனை கேட்பதற்காக வந்தபோது சாதாரண பிரச்சனையாகத் தான் தோன்றியது. பத்து அமர்வுகளுக்கு பின்னும் கோளம் கோளமாக கனவுகள் சுழன்று சுழன்று பிளவுபட்டு பிரச்சனையின் மையத்தை தேடுவதே பெரும்பாடாக போய்விட்டது. அதன் ஆழம் இருண்மையாகி விட்டது. வேர் பிடிபடவே இல்லை. எல்லா கனவுகளுமே நமது இச்சையின் வெளிப்பாடுகளாக இருக்க வேண்டிய அவசியம் அநேகமாக இல்லை என்று முதல் அமர்வின் போது டாக்டர் விவரித்திருந்தார்.

கனவு என்பது ஒரு மறைப்பு உத்தி தான். அதை ஆராய்வதன் மூலம் அறிவது என்பது அதற்கப்பாலான தன்னிலையையும் தன்னிலைகளுக்கும் சமூகங்களுக்கும் அஞ்சும் குற்றங்களை  நிகழ்த்துவதாகவும் உள்ளது. ஆனால் அவை மட்டுமே கனவுகளாகி விடாது. உங்களுக்கு வாசிக்கும் பழக்கம் உள்ளதா?

இல்லை

நான் சிலவற்றை பரிந்துரைக்கிறேன். உங்களது பிரச்சனை என்ன என்பது உங்களுக்கே தெளிவாக தெரிய வேண்டும் என்றில்லை. ஆனால் நீங்கள் அச்சம் கொள்ளக் கூடாது. இந்த புத்தகங்கள் உங்களது குழப்பத்தை போக்கவும் அடிப்படைகளை அறிந்து கொள்ளவும் உதவக் கூடும். அடுத்த அமர்வை இரண்டு வாரங்கள் கழித்து வைத்துக் கொள்ளலாம். மனதுக்கு இதமானதை ஒரு பயிற்சியாக்கி பழகுங்கள். சரி செய்து விடலாம்.

மனதுக்கு பிடித்தது என்றவுடன் எனக்கு கடலும் பறவைகளும் தான் நினைவுக்கு வந்தன. தினமும் கடலை வெறுமனே உட்கார்ந்து கொண்டு ரசிக்க ஆரம்பித்தேன். ரம்மியமாகத் தான் இருந்தது. ஆனால் அன்றைய இனிமை மூன்று மாதங்களுக்குப் பிறகு சிக்கல்களின் முடிச்சை மேலும் இறுக்கி விட்டது. டாக்டர் பரிந்துரைத்த புத்தகங்களின் கதாபாத்திரங்களும் உரையாடல்களும் என் கனவுகளில் வரவே இல்லை. நான் அறிந்திராத தேசத்தின் மீதான படையெடுப்புகள் - விடிந்த பின் அந்நிலத்தின் குரூர வாசனை தான் என்னைச் சுற்றி நான் நுகர்வது போன்ற எண்ணங்கள் அதீத ரத்தத் தீற்றல்களுடன் என்னை பீதி கொள்ளச் செய்தன. ஒரே கனவை பலமுறை கனவுகளில் அடுத்தடுத்த நாட்களிலோ அதே இரவில் அடுத்தடுத்த கனவுகளிலோ கண்டேன். குழந்தைகள் பூங்காவில் இருவர் உறவு கொள்வதை பார்த்து குழந்தைகள் இருவர் அதை முயற்சி செய்வதை நான் மறைந்திருந்து பார்ப்பது போல், மாமிச வெறி என்னுள் வளர்ந்து மனிதர்களை உண்பது போல், உடல் முழுதும் மூடப்பட்டு முதுகு காட்டி நிற்கும் பெண்ணின் முகம் கருப்பு என நான் யூகிப்பது போல், சாலையில் விழுந்த ஒற்றை மலரை மின்னல் தாக்கி ஆனால் நான் கருகுவது போல், அடர்ந்த ஒளிக் கற்றைகள் என்னை ஏந்தி அகண்ட பால் வீதியில் வீசுவது போல்.

உங்களது குழந்தைகள் நீங்களும் உங்கள் மனைவியும் உறவு கொள்வதை பார்த்து விடுவார்களோ என்ற பயம் அப்படி கனவாக உருமாறி வந்திருக்கலாம்.

நேற்றைய கனவில் நிலம் தட்டையாக அல்லாது செங்குத்தாக நிற்க நான் என்னை இழுத்து செல்லும் ஒரு நாயுடன் நடந்து போய் கொண்டிருந்தேன். நட்சத்திரங்களை விழுங்கும் கோபுரங்கள் மீதிருந்து நூற்றுக்கணக்கான நாய்கள் என்னுடைய நாயை குதர வருகின்றன. அப்போது அந்த நாய் என்னை தனது பின்னங் காலால் சுட்டிக் காட்டி நான்தான் இவனை இழுத்துச் செல்கிறேன், இவனை தாக்குங்கள் என்கிறது. அவை அத்தனையும் என் மீது பாய நான் சிரித்துக் கொண்டு தானிருக்கிறேன். இதற்கு என்ன அர்த்தம்? நாய்கள் மீது எனக்கு பிரியமும் இல்லை வெறுப்பும் இல்லையே, அவை என்னுடைய தசைகள் அத்தனையையும் பிய்த்து தின்கின்றன. இதோ இந்த வலது கணுக்கால் தசையை விட்டுவிட்டீர்கள். அதையும் மீதம் வைக்காமல் எனக்கு மோட்சம் தாருங்கள் என்று அவற்றிடம் நான் இறைஞ்சுகிறேன். ஆனால் அவை என்னை அதன் பின் சீண்டக் கூட இல்லை. நான் கதறிக் கதறி அழுகிறேன்.


டாக்டர் பரிவுடன் என் தோளை அழுத்தினார். அதற்குப் பிறகு அடுத்தடுத்த அமர்வுகளில் சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். நான் காணும் கனவுகளை தினமும் எழுதி வைக்கச் சொன்னார். ஒரு மனிதனுக்கு ஓரிரவில் பதின்மூன்று கனவுகள் வந்தால் அதிகம் என்றார். எனக்கு இருபத்தி எட்டு. அவை அத்தனையையும் நான் நினைவில் வைத்திருந்தது தான் டாக்டரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தனையும் அல்ல, நினைவில் நின்றது மட்டும் இத்தனை என்றேன். எனக்கு வரும் கனவுகளின் மையச் சரடை கோர்க்க எவ்வளவோ முயன்றும் நூல் நழுவிக் கொண்டே இருந்தது. அவற்றின் சில பொதுவான அம்சங்கள் என டாக்டர் யூகித்திருந்தவை அதன் பிறகு எட்டிப் பார்க்கவே இல்லை. பரிச்சயமல்லாத அசட்டுத் துரத்தல்கள் கூட ஆசுவாசம் அளித்தன. நான் பார்க்கும் கேட்கும் சிந்திக்கும் எண்ணங்கள் கனவுகளில் வீரியத்துடன் உக்கிரம் கொள்ள ஆரம்பித்தவுடன் உயிர் நடுங்க ஆரம்பித்துவிட்டது. எனக்குப் பிடிக்கும் விஷயங்கள், நான் செய்யும் அன்றாட வேலைகள் - பழக்க வழக்கங்கள் இரவில் தூக்கத்தில் துக்ககரமான படமாக ஓடுவது சகித்துக் கொள்ளமுடியாததாகியது.


பொதுவாக கனவுகள் மங்கலாகத் தான் நினைவிலிருக்கும். நீங்கள் இத்தனை துல்லியமாக விவரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார். கனவுகள் மூளையின் முக்கிய செயல்பாடுகள். மூளைகளின் இடைவெளிகள் கனவுகளாலேயே நிரப்பப்படுகின்றன. சிக்கல் யாதெனில் ஒரே கனவில் நிகழ்காலத்திலும் ஒளிக் காலத்திலும் பயணிக்கும் பிம்பங்களை ஒரே கணத்தில் குறுக்கும் நெடுக்குமாக பல காலங்கள் முன்னும் பின்னும் தொடர்கின்றன. அதாவது போர்ஹே சொல்வது போல கனவு நிகழ் வெளியிலும்  நினைவின் பதிவு உள்ளேயும் ஒரே கணத்தில் நிகழும்.

அதாவது டாக்டர், ஒரே அணு நேர் சக்தியாகவும் எதிர் சக்தியாகவும் செயல்படுவது போல என்கிறீர்களா?

ஆம். ஒரே கணத்தில் பல கனவுகள், அவற்றை  எதிர்க்கும் உங்கள் மனது, அந்த எதிர்ப்பினால் உண்டான பிம்பங்களின் இணைக் கனவுகள், கனவை விமர்சிக்கும் கனவுகள், அதை இவை இப்படியில்லை என மறுப்பு கூறும் கனவுகள் என பல பிசாசுகள் பின்னிப் பிணைந்து செயல்படும். நாம் அவற்றை பயிற்சியின் மூலமாக விழிப்புடன் எதிர் வினையாற்றாமல் கவனிக்க மட்டுமே முடியும். கனவுகளை வெறுமனே கவனிக்கப் பழகிய பிறகு அவற்றை தவிர்க்கவும் முடியும்.

கனவுகளை தவிர்ப்பதற்கான வகுப்புகள் எனக்கு தொடங்கப்பட்டன. என் மருத்துவரின் மருத்துவ நண்பர் என் மூளையின் இட வலது திசுக்களை இணைக்கும் பாலங்களை ஆராய்ந்தார். அவை பிளவுபட்டிருப்பது என் அதீத கனவுலகங்களின் சிருஷ்டியை நிர்மாணிப்பதாக இருந்தன. பிளவின் பால் படைப்பு. நான் சிக்கலான கேள்விகள் கேட்பதை தவிர்க்கச் சொன்னார்கள். 1, 2, 6, 12, 28, 44 வாரங்களுக்குப் பிறகு நான் கனவுகளின் தொல்லையின்றி நிம்மதியாக உறங்கினேன்.


எனக்கு உண்டான மன உளைச்சல்களுக்கு தனியாக சிகிச்சை பெற்றேன். நல்ல இசையும் இயற்கையும் நூல்களும் சூழலும் உடலையும் மனதையும் பாதிக்காது என்பதை என் ஆழ் மனம் விரும்பி ஏற்று உவகை கொள்ளச் செய்தது. சிகிச்சை முடிந்த பின் சில வாரங்களுக்கு நான் பின்பற்றுவதெற்கென கால அட்டவணை ஒன்றை தயார் செய்து அளித்திருந்தார்கள். காலை 4.30 - 6.00 மணி வரை தியானம் மற்றும் சில யோகா பயிற்சிகள். 6.00- 6.30 மனதை அதிரச் செய்யாத மெல்லிய இசை கேட்க வேண்டும். பின்பு தினசரி அலுவல்கள். மாலை 5.00 மணிக்கு நடை பயிற்சி. 5.30க்கு ஆன்மீக/ தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை வாசித்தல். நேற்று விட்ட பத்தியில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு பத்திகள் வாசித்த நிலையில் ஆச்சரியமாக வரிகள் நகர ஆரம்பித்தன. நூலில் இருந்து தாவி குதித்து முப்பரிமாணம் கொண்டன. அவை குறுக்கும் நெடுக்குமாக உலவத் தொடங்கின. வரிகள் வார்த்தைகளாக பின் எழுத்துகளாக பிரிந்தன. என்னை தாக்கத் தொடங்கின.

Followers

Total Pageviews

தமிழ்ப் புள்ளி

About this blog

கோகுல் பிரசாத். Powered by Blogger.