நவீன இலக்கியத்தில் ஜாய்ஸின் மிகைப்படுத்தப்பட்ட பிம்பம்

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கான புறவய அடித்தளம் ஏற்படுத்திக்கொடுத்து, பின்னர் கதையின் மையத்தில் பிரச்னையை அணுகி விவாதித்து முடிவு நோக்கி நகரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மரபான சிறுகதை கட்டமைப்பை  சீர்குலைத்து மாற்றியமைத்தவர்களில் முன்னோடி ஜேம்ஸ் ஜாய்ஸ். கதையின் ஆரம்ப வரிகளிலேயே மோதல் அல்லது முரண்பாடுகளின் சாராம்சத்தை தொடங்கிவிடுபவரான ஜாய்ஸ் எந்தவொரு கதையிலும் தீர்வை மட்டும் முன்வைப்பதே இல்லை. டி எஸ் எலியட்டால் "பத்தொன்பதாம் நூற்றாண்டினை துவம்சம் செய்த மனிதன்" என புகழப்பட்ட ஜாய்ஸ் உரைநடையில் கவித்துவ உச்சங்களை தனது தனித்துவமான கதை கூறும் உத்திகளால் சாத்தியப்படுத்தியவர்.

Epiphany எனும் கருத்தாக்கத்தினை ஜேம்ஸ் ஜாய்ஸ் "டப்ளினர்ஸ்" கதைகளில் மிகத் தீவிரமாக கையாள்கிறார். விவிலியம் முதல் சமகால இலக்கியம் வரை எடுத்துக்காட்டுகளை அகழ்ந்தெடுத்து எப்பிஃபனிக்கு சிற்சில மாற்றங்களுடன் பல்வேறு விளக்கங்கள் வழங்கப்படும் நிலையில், நவீன விமர்சகர்கள் ஜாய்ஸின் கதைகளைக் கொண்டு விளக்குகையில் "தரிசனத்தை கண்டுகொள்ளும் தருணம்" என்கிறார்கள். ஜாய்ஸ் இதனை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் மேற்கூறிய விளக்கத்தையே சற்று மாற்றி பணிவான தொனியில் "எப்பிஃபனி என்பது அறிதலின் கணம் மட்டுமே" என்கிறார்.

இன்று இக்கதைகளை வாசிக்கையில் ஜாய்ஸும் மற்ற விமர்சகர்களை போலவே தனது கதைகளின் தளம் உருவாக்கிய கருத்தாக்கம் குறித்து மிகையான எண்ணம் கொண்டிருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. 'த டெட்' கதையை தவிர பிற கதைகள் அனைத்தும் குறு மனப்பதிவுகளாகவே எஞ்சி நிற்கின்றன. எப்பிஃபனி என்பதன் அடிப்படை அர்த்தம் தோற்றங்கள் என்பதாகவே இருக்கிறது. கணநேர தோற்றங்கள் என்பதிலிருந்து அறிதலாக உருமாறும் சாத்தியங்கள் இக்கதைகளில் இல்லை. 'அரபி', 'எவலின்' போன்ற கதைகளில் மையக் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவர்களை எவ்வித தரிசனத்திற்கோ அறிதலுக்கோ இட்டுச் செல்வதில்லை. மாறாக திகைப்பிற்கும் குற்றவுணர்ச்சிக்கும் ஆளாகிறார்கள். தோல்வியை ஒப்புக்கொள்வதில் குழப்பங்களும் எதிர்காலம் பற்றிய தயக்கங்களும் ஆக்கிரமிக்கின்றன.

ஆக, இக்கதைகளின் வழியாக உண்மையிலேயே ஜாய்ஸ் எதைச் சுட்டிக் காட்ட முனைகிறார்? 1905 முதல் 1914 வரை பல்வேறு இடைவெளிகளில் எழுதப்பட்ட இப்பதினைந்து கதைகளும் சராசரி மனிதர்களின் தினசரி தோல்விகள் மீதே அதீத கவனம் கொள்கின்றன. 'அரபி' சிறுகதையில் அச்சிறுவனுக்கு ஏற்படும் கசப்பான வாழ்வனுபமானது அவனை மேலும் குழப்பத்திலேயே ஆழ்த்துகிறது. அரபி தனது சூழல் மீது கட்டுப்பாடோ தன்னுணர்வோ அற்றவனாக இருக்கிறான்.  அவனால் இயன்றதெல்லாம் ஆத்திரத்தோடு அச்சூழலிலிருந்து வெளியேறுவது மட்டுமே. இங்கே 'விழிப்புணர்வு' என்பது அரபிக்கு நிகழவில்லை. ஒரு தருணத்தின் கணநேர மனவெழுச்சி கூட பதிவு செய்யப்படாது கதை சட்டென்று முற்றுப் பெறுகிறது.

நாடகாசிரியர் இப்ஸன்-ஐ ஆதர்சமாகக் கொண்டு இயங்கிய ஜாய்ஸ் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மானுடத் தருணங்களும் தனி மனிதனின் வாழ்வில் அர்த்தமற்றதாகவே இருக்க முடியும் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அத்தருணங்கள் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் ரகசியங்களை மனிதன் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்துகொண்டாலும் உணராவிட்டாலும் அதனால் வாழ்வில் எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்கிறார். ஜாய்ஸின் டப்ளினர்ஸ் கதைகளை பொறுத்த மட்டில் எப்பிஃபனி என்பது 'அறிதலை உள்ளடக்கிய திறக்கப்படாத தருணங்கள்' என வகுத்துக் கொள்ளலாம்.

வசந்த காலத்தில் தொடங்கும் முதல் கதை குழந்தைப் பருவ நிகழ்வுகளை விவரிக்கிறது. அடுத்தடுத்த கதைகளில் சீரான இடைவெளியில் பருவங்களும் காலங்களும் வளர்ந்து தேய்வதை வாசகர்கள் கண்டு கொள்ளலாம். இத்தொகுதியின் இறுதிக் கதையான த டெட் குளிர் காலத்தை தெரிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு கதையிலும் ஒரு கதாபாத்திரம் அடுத்த கதையில் இடம்பெறப் போகும் வேறு ஒரு கதாபாத்திரத்தின் பெயரை கோடிட்டுக் காட்டுகிறது.

சார்லஸ் பார்னெலின் மரணத்திற்குப் பிறகு ஐரிஷ் விடுதலை குறித்தும் ஒருமைப்பாடு பற்றியும் அதுவரை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் வலுவிழந்தன. பெரும் உத்வேகத்துடன் ஒன்று திரண்டெழுந்த ஐரிஷ் தேசியவாதம், பண்பாட்டுத் தத்தளிப்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஐரிஷ் மக்களை தங்களது சுய அடையாளம் குறித்த தேடல் நோக்கி ஸ்திரப்படுத்தியது. அக்கொந்தளிப்பான காலகட்டத்தில் எழுதப்பட்ட டப்ளினர்ஸ், டப்ளின் நகரத்தை ஒரு கலாச்சார மையமாக உருவகித்து செயல் களமாக ஆக்குகிறது. டப்ளின் வாழ்க்கையை சிதைவுற்றதாக மீட்சியற்றதாக விவரிக்கும் ஜாய்ஸ் கணங்களின் தீவிரத்தை கையாள்வதில் தவறிவிடுகிறார்.

பதின்வயதுகளில் மத நம்பிக்கையாளராக வளர்த்தெடுக்கப்பட்ட ஜாய்ஸ் பள்ளியை விட்டு வெளியேறும் போதே மதம் மீதான பற்றுகளை இழந்துவிடுகிறார். மக்களது அதீத குற்றவுணர்ச்சிக்கும் மகிழ்ச்சியற்ற திருமண உறவுகளுக்கும் மதம் தான் முக்கியக் காரணி என தீர்க்கமாக நம்பினார். ஜாய்ஸ் தனது சுயசரிதைத் தன்மை மிகுந்த கதைகளில் கத்தோலிக்க மதம் மீதான ஐயப்பாடுகளையும் விமர்சனங்களையும் கறாராக முன்வைக்கிறார். டப்ளின் நகரத்து வீதிகள், துறைமுகங்கள், மக்களின் நம்பிக்கைகள் ஆகியவற்றின் மீது விசேஷ கவனம் கொள்ளும் ஜாய்ஸ், அந்நகரத்து வெவ்வேறு சமூகப் பின்னணி கொண்ட மக்களது மனவோட்டங்களை நுண்மையுடன் அணுகுவதில்லை. சார்லஸ் டிக்கன்ஸின் லண்டன் நகரத்திற்கு ஒரு மாற்று குறைவாகவே காட்சியளிக்கிறது டப்ளின்.

மொழி நடையிலும் வெளிப்பாட்டு முறையிலும் பல வகையான உத்திகளை பின்னாட்களில் தனது படைப்புகளில் ஜாய்ஸ் கையாள்வதற்கு டப்ளினர்ஸ் ஒரு அடித்தளமாக அமைந்தது. இக்கதைகளின் சில கதாபாத்திரங்கள் யுலிசிஸ் நாவலிலும் இடம்பெறுகின்றன. அவை பெரும்பாலும் ஜாய்ஸிற்கு நெருக்கமானவர்களின் சாயலில் உருப்பெற்றவை. இன்றைக்கு டப்ளினர்ஸ் வாசிக்கப்படுவதற்கு அதன் கவித்துவமான மொழியும் காட்சியின்பமுமே பிரதான காரணங்களாக இருக்க முடியுமென நம்புகிறேன். டப்ளினர்ஸ் தொகுதியை வெளியிடுவதாக வாக்குறுதி அளித்த நிறுவனங்கள் கதைகளில் இடம்பெறும் கடைகளுக்கு ஜாய்ஸ் நிஜப்பெயரையே பயன்படுத்தியிருப்பதை ஆட்சேபித்து பின்வாங்கின. இறுதியாக 1914ல் வெளியிடப்பட்ட போது இத்தொகுதிக்கென பிரத்யேகமாக எழுதப்பட்ட சில கதைகள் சேர்க்கப்படவில்லை. அவை பின் எப்போதும் வெளியாகவே இல்லை. 

கோகுல் பிரசாத்

Followers

Follow by Email

Google+ Badge

Total Pageviews

Google+ Followers

தமிழ்ப் புள்ளி

About this blog

கோகுல் பிரசாத். Powered by Blogger.