நவீன இலக்கியத்தில் ஜாய்ஸின் மிகைப்படுத்தப்பட்ட பிம்பம்

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கான புறவய அடித்தளம் ஏற்படுத்திக்கொடுத்து, பின்னர் கதையின் மையத்தில் பிரச்னையை அணுகி விவாதித்து முடிவு நோக்கி நகரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மரபான சிறுகதை கட்டமைப்பை  சீர்குலைத்து மாற்றியமைத்தவர்களில் முன்னோடி ஜேம்ஸ் ஜாய்ஸ். கதையின் ஆரம்ப வரிகளிலேயே மோதல் அல்லது முரண்பாடுகளின் சாராம்சத்தை தொடங்கிவிடுபவரான ஜாய்ஸ் எந்தவொரு கதையிலும் தீர்வை மட்டும் முன்வைப்பதே இல்லை. டி எஸ் எலியட்டால் "பத்தொன்பதாம் நூற்றாண்டினை துவம்சம் செய்த மனிதன்" என புகழப்பட்ட ஜாய்ஸ் உரைநடையில் கவித்துவ உச்சங்களை தனது தனித்துவமான கதை கூறும் உத்திகளால் சாத்தியப்படுத்தியவர்.

Epiphany எனும் கருத்தாக்கத்தினை ஜேம்ஸ் ஜாய்ஸ் "டப்ளினர்ஸ்" கதைகளில் மிகத் தீவிரமாக கையாள்கிறார். விவிலியம் முதல் சமகால இலக்கியம் வரை எடுத்துக்காட்டுகளை அகழ்ந்தெடுத்து எப்பிஃபனிக்கு சிற்சில மாற்றங்களுடன் பல்வேறு விளக்கங்கள் வழங்கப்படும் நிலையில், நவீன விமர்சகர்கள் ஜாய்ஸின் கதைகளைக் கொண்டு விளக்குகையில் "தரிசனத்தை கண்டுகொள்ளும் தருணம்" என்கிறார்கள். ஜாய்ஸ் இதனை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் மேற்கூறிய விளக்கத்தையே சற்று மாற்றி பணிவான தொனியில் "எப்பிஃபனி என்பது அறிதலின் கணம் மட்டுமே" என்கிறார்.

இன்று இக்கதைகளை வாசிக்கையில் ஜாய்ஸும் மற்ற விமர்சகர்களை போலவே தனது கதைகளின் தளம் உருவாக்கிய கருத்தாக்கம் குறித்து மிகையான எண்ணம் கொண்டிருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. 'த டெட்' கதையை தவிர பிற கதைகள் அனைத்தும் குறு மனப்பதிவுகளாகவே எஞ்சி நிற்கின்றன. எப்பிஃபனி என்பதன் அடிப்படை அர்த்தம் தோற்றங்கள் என்பதாகவே இருக்கிறது. கணநேர தோற்றங்கள் என்பதிலிருந்து அறிதலாக உருமாறும் சாத்தியங்கள் இக்கதைகளில் இல்லை. 'அரபி', 'எவலின்' போன்ற கதைகளில் மையக் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவர்களை எவ்வித தரிசனத்திற்கோ அறிதலுக்கோ இட்டுச் செல்வதில்லை. மாறாக திகைப்பிற்கும் குற்றவுணர்ச்சிக்கும் ஆளாகிறார்கள். தோல்வியை ஒப்புக்கொள்வதில் குழப்பங்களும் எதிர்காலம் பற்றிய தயக்கங்களும் ஆக்கிரமிக்கின்றன.

ஆக, இக்கதைகளின் வழியாக உண்மையிலேயே ஜாய்ஸ் எதைச் சுட்டிக் காட்ட முனைகிறார்? 1905 முதல் 1914 வரை பல்வேறு இடைவெளிகளில் எழுதப்பட்ட இப்பதினைந்து கதைகளும் சராசரி மனிதர்களின் தினசரி தோல்விகள் மீதே அதீத கவனம் கொள்கின்றன. 'அரபி' சிறுகதையில் அச்சிறுவனுக்கு ஏற்படும் கசப்பான வாழ்வனுபமானது அவனை மேலும் குழப்பத்திலேயே ஆழ்த்துகிறது. அரபி தனது சூழல் மீது கட்டுப்பாடோ தன்னுணர்வோ அற்றவனாக இருக்கிறான்.  அவனால் இயன்றதெல்லாம் ஆத்திரத்தோடு அச்சூழலிலிருந்து வெளியேறுவது மட்டுமே. இங்கே 'விழிப்புணர்வு' என்பது அரபிக்கு நிகழவில்லை. ஒரு தருணத்தின் கணநேர மனவெழுச்சி கூட பதிவு செய்யப்படாது கதை சட்டென்று முற்றுப் பெறுகிறது.

நாடகாசிரியர் இப்ஸன்-ஐ ஆதர்சமாகக் கொண்டு இயங்கிய ஜாய்ஸ் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மானுடத் தருணங்களும் தனி மனிதனின் வாழ்வில் அர்த்தமற்றதாகவே இருக்க முடியும் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அத்தருணங்கள் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் ரகசியங்களை மனிதன் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்துகொண்டாலும் உணராவிட்டாலும் அதனால் வாழ்வில் எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்கிறார். ஜாய்ஸின் டப்ளினர்ஸ் கதைகளை பொறுத்த மட்டில் எப்பிஃபனி என்பது 'அறிதலை உள்ளடக்கிய திறக்கப்படாத தருணங்கள்' என வகுத்துக் கொள்ளலாம்.

வசந்த காலத்தில் தொடங்கும் முதல் கதை குழந்தைப் பருவ நிகழ்வுகளை விவரிக்கிறது. அடுத்தடுத்த கதைகளில் சீரான இடைவெளியில் பருவங்களும் காலங்களும் வளர்ந்து தேய்வதை வாசகர்கள் கண்டு கொள்ளலாம். இத்தொகுதியின் இறுதிக் கதையான த டெட் குளிர் காலத்தை தெரிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு கதையிலும் ஒரு கதாபாத்திரம் அடுத்த கதையில் இடம்பெறப் போகும் வேறு ஒரு கதாபாத்திரத்தின் பெயரை கோடிட்டுக் காட்டுகிறது.

சார்லஸ் பார்னெலின் மரணத்திற்குப் பிறகு ஐரிஷ் விடுதலை குறித்தும் ஒருமைப்பாடு பற்றியும் அதுவரை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் வலுவிழந்தன. பெரும் உத்வேகத்துடன் ஒன்று திரண்டெழுந்த ஐரிஷ் தேசியவாதம், பண்பாட்டுத் தத்தளிப்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஐரிஷ் மக்களை தங்களது சுய அடையாளம் குறித்த தேடல் நோக்கி ஸ்திரப்படுத்தியது. அக்கொந்தளிப்பான காலகட்டத்தில் எழுதப்பட்ட டப்ளினர்ஸ், டப்ளின் நகரத்தை ஒரு கலாச்சார மையமாக உருவகித்து செயல் களமாக ஆக்குகிறது. டப்ளின் வாழ்க்கையை சிதைவுற்றதாக மீட்சியற்றதாக விவரிக்கும் ஜாய்ஸ் கணங்களின் தீவிரத்தை கையாள்வதில் தவறிவிடுகிறார்.

பதின்வயதுகளில் மத நம்பிக்கையாளராக வளர்த்தெடுக்கப்பட்ட ஜாய்ஸ் பள்ளியை விட்டு வெளியேறும் போதே மதம் மீதான பற்றுகளை இழந்துவிடுகிறார். மக்களது அதீத குற்றவுணர்ச்சிக்கும் மகிழ்ச்சியற்ற திருமண உறவுகளுக்கும் மதம் தான் முக்கியக் காரணி என தீர்க்கமாக நம்பினார். ஜாய்ஸ் தனது சுயசரிதைத் தன்மை மிகுந்த கதைகளில் கத்தோலிக்க மதம் மீதான ஐயப்பாடுகளையும் விமர்சனங்களையும் கறாராக முன்வைக்கிறார். டப்ளின் நகரத்து வீதிகள், துறைமுகங்கள், மக்களின் நம்பிக்கைகள் ஆகியவற்றின் மீது விசேஷ கவனம் கொள்ளும் ஜாய்ஸ், அந்நகரத்து வெவ்வேறு சமூகப் பின்னணி கொண்ட மக்களது மனவோட்டங்களை நுண்மையுடன் அணுகுவதில்லை. சார்லஸ் டிக்கன்ஸின் லண்டன் நகரத்திற்கு ஒரு மாற்று குறைவாகவே காட்சியளிக்கிறது டப்ளின்.

மொழி நடையிலும் வெளிப்பாட்டு முறையிலும் பல வகையான உத்திகளை பின்னாட்களில் தனது படைப்புகளில் ஜாய்ஸ் கையாள்வதற்கு டப்ளினர்ஸ் ஒரு அடித்தளமாக அமைந்தது. இக்கதைகளின் சில கதாபாத்திரங்கள் யுலிசிஸ் நாவலிலும் இடம்பெறுகின்றன. அவை பெரும்பாலும் ஜாய்ஸிற்கு நெருக்கமானவர்களின் சாயலில் உருப்பெற்றவை. இன்றைக்கு டப்ளினர்ஸ் வாசிக்கப்படுவதற்கு அதன் கவித்துவமான மொழியும் காட்சியின்பமுமே பிரதான காரணங்களாக இருக்க முடியுமென நம்புகிறேன். டப்ளினர்ஸ் தொகுதியை வெளியிடுவதாக வாக்குறுதி அளித்த நிறுவனங்கள் கதைகளில் இடம்பெறும் கடைகளுக்கு ஜாய்ஸ் நிஜப்பெயரையே பயன்படுத்தியிருப்பதை ஆட்சேபித்து பின்வாங்கின. இறுதியாக 1914ல் வெளியிடப்பட்ட போது இத்தொகுதிக்கென பிரத்யேகமாக எழுதப்பட்ட சில கதைகள் சேர்க்கப்படவில்லை. அவை பின் எப்போதும் வெளியாகவே இல்லை. 

கோகுல் பிரசாத்

ஆன்டன் செகாவின் படைப்புகளை முன்வைத்து

ஆன்டன் செகாவ் தனது நாற்பத்து நான்காவது (1860 - 1904) வயதில் காச நோயால் இறந்த போது அறுநூற்று சொச்சம் சிறுகதைகளை எழுதி வெளியிட்டிருந்தார். தொடக்க காலத்தில் நகைச்சுவை துணுக்குகளை மட்டுமே பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தவர் தனது இருபத்து ஆறாவது வயதிற்குள்ளாகவே நானூறு கதைகளை எழுதிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பெருநகரத்தின் காதலற்ற மனிதர்களும் பணக்காரச் சீமாட்டிகளும் ஏமாற்றுக்காரர்களுமே அவரது பிரதான கதாபாத்திரங்கள். நுண் சித்தரிப்புகள் ஊடாக நம்பகத்தன்மை மிகுந்த புறச்சூழலை உருவாக்கி அதில் கதை மாந்தர்களின் மனவோட்டங்களை வலிந்து திணிக்காமல் கூர்ந்து அவதானித்த படியே மானுடத்தின் மகத்தான அகத்தேடலை நிகழ்த்துகிறார். மானுட இயல்பை ஆராய்வது குறித்த செகாவின் மாளாத தாகமே அவர் எட்டாயிரம் கதாபாத்திரங்களை படைக்க உந்து சக்தியாக இருந்திருக்கிறது.


செகாவ் கதைகளின் சிறப்பம்சமே அவற்றின் கட்டுமானம்தான். இவான் துர்கனேவ் கோலோச்சிய காலகட்டத்தில் எழுதத் துவங்கிய செகாவ் அதுகாறும் நிலவி வந்த மரபான கூறுமுறைகளை புறந்தள்ளினார். கட்டமைப்பை திருத்தி எழுதினார். கதையடுக்குகளின் சமநிலைகளை குலைத்தார். சிக்கல்களை தோற்றுவித்து அவை இட்டுச் செல்லும் அதிதீவிர கணங்களினால் உருப்பெற்று தன் போக்கில் திரண்டெழுவதே அவர் கதாபாத்திரங்களின் மைய இயல்பு. உணர்ச்சியற்ற நடையில் வாழ்வை விலகி நின்று வேடிக்கை பார்க்கும் நம்பிக்கையின்மையின் கவிஞனான செகாவ் மனித மனத்தை குறிப்பிட்ட வரையறைக்குள் வகுத்துவிட இயலாத முடிவுறா தன்மையையும் அறிந்தவராவார். மருத்துவர் செகாவ் ஓர் எழுத்தாளனாக மனிதர்களின் நம்பிக்கைச் சுடரை ஒரு கேலிப் புன்னகையுடன் மென்மையாக அணைத்துவிடுகிறார்.


யதார்த்தை மீறி செகாவ் எதையுமே எழுதுவதில்லை. ஒரு புகைப்படக் கலைஞனை போல நிதர்சனத்தை பதிவு செய்வதை மட்டுமே கால் நூற்றாண்டாக தலையாய பணியாகக் கொண்டிருந்தார். வாசகனை புன்னைகைக்க வைக்கும் புகைப்படக் கலைஞன். சூழ்நிலைகளின் சூத்ரதாரி. 1890கள் வரை நையாண்டிக் கதைகளையே பிரதானமாக எழுதியவர் பின்னர் அவற்றில் இருந்து விடுபட்டு விதியின் குரூரக் கைகளில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளும் கதை மாந்தர்களை உடைய நாடகங்களையும் சிறுகதைகளையும் படைத்தார். ஒற்றை புள்ளியில் உச்சம் கொள்ளும் - இருவேறு யதார்த்தங்கள் மோதுகையில் நிகழும் நகைமுரணை வெற்றிகரமாகக் கையாண்டார். 1900க்குப் பிறகு செகாவின் அந்திமக்கால சிறுகதைகள் ஓர் உச்ச கணத்தில் சட்டென்று முடிவுறும் இசைக்கோர்வையை போலவே நிறைவுறுகின்றன.


செகாவின் பெரும்பாலான கதைகளை இரு வகையான கூறுமுறைகளுக்குள் வகைப்படுத்திவிடலாம். ஒன்று - புறச் சூழ்நிலைகளின் பாதிப்பினால் எவ்வித மெனக்கெடலுமின்றி உருவாகும் சமூகக் காரணிகளை கதாபாத்திரங்கள் எள்ளல் வழியாகவும் கசப்புணர்வின் வழியாகவும் எதிர்கொள்வது. மற்றொன்று - மனிதனின் அடிப்படை இயல்புகளாக சமூகம் கருதுபவற்றை புறச்சூழலில் பொருத்தி அந்த எளிய மனிதர்களின் எதிர்வினையை ஓர் உளவியல் நிபுணனுக்குரிய நேர்த்தியுடன் பதிவு செய்வது. கதாபாத்திரங்களின் வெவ்வேறு மனநிலைகளை சித்தரிப்பதில் மேதையான செகாவ் ஒரு தேர்ந்த ஆய்வாளனாக மனச்சிடுக்குகளின் ஆழம் வரை ஊடுருவி அதன் ஊடுபாவானைகளை துல்லியமாக வெளிக்கொணர்கிறார். 'ஓர் எழுத்தாளனின் பணி பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை முன்வைப்பதல்ல. பிரச்னையை மிகச் சரியான முறையில் விவரிப்பது மட்டுமே' என்று கூறும் செகாவ் மனத்துள் கனிந்து மலர்ந்தவராகிறார்.

தீர்க்கதரிசிகளாக அறியப்பட்ட தல்ஸ்தோயும் தாஸ்தாயேவ்ஸ்கியும் மனித குலத்தின் வீழ்ச்சியை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது செகாவ் மனித வாழ்வின் அபத்தங்களை சுட்டிக்காட்டினார். நீதி போதனை கதைகளால் சலிப்புற்று தேங்கிக் கிடந்த ருஷ்யக் குட்டையில் கல்லெறிந்தார். வரலாற்றின் புழுதிப் பக்கங்களில் பிறர் உழன்று கொண்டிருக்கையில் தனி மனிதனை முன் நிறுத்தும் மென்சோகக் கதைகளாக எழுதிக் குவித்தார். தல்ஸ்தோய் மனிதர்கள் மீது பெரும்நம்பிக்கை உடையவராக இருக்கிறார். செகாவ் சந்தேகிக்கிறார். வாழ்க்கை என்பது கடவுள் தன்மையற்ற அவிழ்க்கவியலாத மர்ம முடிச்சுகளை கொண்டதாக உணர்கிறார். ஒருவன் நல்லவனாக வாழ்வதால் மட்டுமே துன்பங்களில் இருந்தும் அவனுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் இருந்தும் தப்பிவிட முடியாது என்கிறார். அதே சமயம் சராசரிகளை நேரடியான மொழியில் அங்கதச்சுவையுடன் சாடுகிறார்.

சலிப்பும் தனிமையும் தான் செகாவ் கதைகளின் ஆதாரப்புள்ளி. மரணம் கூட அபத்தமான ஒன்றாகவே சித்தரிக்கப்படுகிறது. அவரவர்  இயலாமையின் மீதான சலிப்பு. பகட்டாக பொய்யாக நடிக்க வேண்டியதன் கழிவிரக்கம். அவநம்பிக்கை மீது கட்டி எழுப்பப்பட்ட உறவுகளின் புறக்கணிப்பு. அடையாளமின்மை தரும் சோர்வு. தினசரி வாழ்வின் மீது செகாவ் உருவாக்கும்  குவிமையம் அபாரமானது. அவர் தனது கதைகளில் குரலை உயர்த்துவதே இல்லை. பெண்களின் அக உணர்வுகளை தல்ஸ்தோயை காட்டிலும் மேலதிகமாக விவரித்திருக்கும்  செகாவ் அடங்கிய குரலிலேயே ஒரு சொல் கூட வீணடிக்காது மனத்தை அவதானிக்கிறார். நாய்க்காரச் சீமாட்டி, பச்சோந்தி உள்ளிட்ட செகாவின் புகழ்பெற்ற பல கதைகளில் பல்வேறு வகையான நாய்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. அவை கவ்விச் செல்லும் எலும்புத் துண்டுகள் கூட மனிதனை பொறாமை கொள்ளச் செய்கின்றன. தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் விசுவாசச் சுமையை உதறிவிட்டு வன்மத்தில் இளைப்பாறுகின்றன. தன்னை அறிந்துவிட்ட ருசியில் திளைக்கின்றன. 

செகாவின் கதாபாத்திரங்கள் பெருங்குற்றவாளிகள் அல்ல. பதட்ட சூழ்நிலைகளின் விளைவால் தடுமாறுபவர்கள். கஞ்சத்தனம் உடையவர்கள். சின்னப்  பொய் ஒன்றை சொல்லியதற்கு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள். உயரதிகாரியின் முதுகில் தும்மியதற்கே இன்னுயிரை இழப்பவர்கள். உணர்சிகரமான மனிதர்கள். 'எல்லாம் தனக்கு எதிரானதாகாவே இருக்கின்றன' எனப் புலம்புபவர்கள். தற்கொலை செய்து கொள்ளச் சென்றவன் காப்பாற்றப்பட்டு கூட்டத்தால் அடித்தே கொல்லப்படுகிறான். இளம் பெண்கள் சந்தையில் சொற்ப விலைக்கு விற்கப்படுகிறார்கள். குடிகாரர்கள் தங்களது அடுத்த மதுக் கோப்பையை பருக இயலாது சரிந்து விழுகையில் பரிகாசம் செய்யப்படுகிறார்கள். ஜார் ஆட்சியில் ஜமீன்தார்களின் அதிகாராமும் பண பலமும் கேலிக்குள்ளாக்கப்படுகிறது. செகாவின் கதைகளில் காதலிப்பவர் அனைவரும் திருப்தியற்றே அலைகிறார்கள். இளம் பருவத்து காதலை அபத்தமானதாக உணர்பவர்கள். காதலர்கள் சூழ்நிலைகள் காரணமாக பிரிய நேர்கிறது அல்லது அக்காதல் திருமணத்தில் முடிந்து காதலின் மயக்கம் அறுந்து கசக்கிறது. விரக்தி அடையச் செய்கிறது.


செகாவ் தனது கதாபாத்திரங்களை கருணையுடன் அணுகுகிறார். அவர்கள் மீது பச்சாதாபமும் பிரியமும் கொள்கிறார். 'நண்பர்களே, இப்படி வாழ்வது அவமானகரமானது' என உண்மையான அக்கறையுடன் சுட்டிக் காட்டுகிறார். தனது கதை மாந்தர்கள் மீது செகாவ் எவ்வித குற்றச்சாட்டையும் முன்வைப்பது இல்லை. 'அன்ன கரினீனா'வில் அவளது தவறுக்காக அன்னாவை தண்டிக்கும் தல்ஸ்தோய் போலல்லாது The Lady With A Dog சிறுகதையில் 'தனது' அன்னாவை செகாவ் கனிவுடனேயே கடக்கிறார். அவரது கதாபாத்திரங்கள் எவருமே எத்தகைய சூழ்நிலைகளிலும் தத்தம் குணாதிசியங்களை மாற்றிக் கொள்வதேயில்லை. சூழ்நிலைக்குத் தக்க செயல்களை மட்டும் நிகழ்த்தி விட்டு அச்சூழ்நிலை வேண்டுகிற அக மாற்றங்களை கவனமாக தவிர்த்துவிடுகிறார்கள். இறுதிவரைக்குமே எவரும் திருந்தி பண்படுவதில்லை. வாழ்க்கை அவர்கள் மூலமாக பெரும் மாற்றங்கள் ஏதுமின்றி வெறுமனே கடக்கிறது.

செகாவின் சமகால சிறுகதை ஆசிரியரான மாப்பசான் புறக்கட்டுமானத்தில் வல்லவராக விளங்கினார். ஆனால் கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்களை, போர்ச் சூழலில் கூட , வகுப்பதில் பகுத்து ஆராய்வதில் மாப்பசானின் திறன் எல்லைக்குட்பட்டது. செகாவின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டவுடன் அவை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாது மொழியிலும் சிறுகதை வடிவத்திலும் அசாத்தியமான மாற்றங்களை தோற்றுவித்தன. அதுவரை பிரச்சனைகளை விவாதிக்கும் அவற்றை தீர்க்கக் கூடிய அத்தனை சாத்தியங்களையும் ஆராயும் ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற அதிபுத்திசாலிகளையே விரும்பிய ஐரோப்பிய மனம் செகாவின் எளிய அழுத்தமான கூறல் முறை கொண்ட, பிரச்சனைகளை பயத்துடனேயே அணுகும், அவற்றின் முன் மன்றாடும், தோற்றுப் போகும் சாதாரணர்களை வாரி அணைத்துக் கொண்டது. ஜேம்ஸ் ஜாய்சும் ரேமன்ட் கார்வரும் 'செகாவியர்கள்'. ஜாய்சஸினால் மனசாட்சி உத்வேகத்துடன் செயலாற்றும் தருணங்களை அதன் வெவ்வேறு பாவனைகளை கோடிட்டு காட்ட முடிகிறது. அதன் அடிநாதமாக விளங்கும் கண்ணுக்குப் புலப்படாத சிக்கல்களை துல்லியமாக விவரிப்பதில் ஜாய்ஸும் திகைத்து நின்றுவிடுகிறார். செகாவ் இதில் விற்பன்னர். கார்வரின் அனைத்து கதைகளும் ஏதேனும் ஒரு வகையில் செகாவிடமிருந்து கடன் பெறப்பட்டவையே. செகாவின்றி கேத்தரின் மேன்ஸ் பீல்டும் ஹெமிங்வேயும் தனித்து இயங்க முடியாது. தனது இறப்பிற்குப் பிறகும் உலக சிறுகதை இலக்கியத்தில் தீவிர பாதிப்பை செலுத்திய செகாவின் நிழலிலிருந்து விலகி ஒரு புது அலையை கால்வினோவும் போர்ஹேசும் உருவாக்க ஐம்பதாண்டு காலம் தேவைப்பட்டது.

செகாவின் கதைகளில் ஒரு வாசகன் தனது கற்பனையால் விரிவாக்கிக் கொள்ளத்தக்க தருணங்கள் மிகமிகக் குறைவே. பூடகமான மொழியையும் உள்ளடுக்குகளையும் உருவாக்க அவர் முனையவே இல்லை. ஆனால் மனதின் பிரம்மாண்டத்தை பறவைக் கோணத்தின் அவசரகதியில் அள்ளிவிடத் துடிக்கும் எழுத்தாளார்கள் நடுவே, செகாவ் நெரிசல் மிகுந்த தெருவில் நிதானமாக நடந்தபடியே எதிர்ப்படும் மனிதர்களின் இயல்பை நுட்பமாக விவரிக்கிறார். கனவுகளுக்கும் நிஜ வாழ்வின் ஏக்கங்களுக்குமான மோதலையும் குரூரத்தன்மையையும் பிரதிபலிக்கிறார். உண்மையை எதிர்கொள்ள அஞ்சி கனவுகளையே உணவாக உட்கொள்பவர்களை திறந்த மனதுடன் அணுகுகிறார். 'கும்பல் மனநிலையை' பரிகசிக்கிறார். எத்தீர்வையும் முன்னிலைப்படுத்தாது மாந்தர்தம் அக உலகில் சடுதியில் நுழைந்து வெளியேறுகிறார். எளிமையாக வாழ்வதன் அவசியத்தையும் ஆன்மாவின் துயரத்தையும் உலக இலக்கியத்திற்கான கொடையாக விட்டுச்சென்ற  இம்மாமேதையின் அக உலகை  இக்கதைகள் வாயிலாக வாசகர்களாகிய நாம் அறிந்து கொள்ள முற்படுவதே சுகம் தரும் பேரனுபவம் .


கோகுல் பிரசாத்

மேற்பார்வையிடப்பட்ட நூல்கள் :
1. Reminiscences Of Anton Chekhov
    Maxim Gorky
2. The Complete Short Stories Of Anton Chekhov
    Richard Pevear & Larissa Volokhonsky (Translators)
    Vintage Classics, Edition 2005
3. Short Novels By Anton Chekhov
    Oxford University Press, Edition 2008

Followers

Follow by Email

Google+ Badge

Total Pageviews

Google+ Followers

தமிழ்ப் புள்ளி

About this blog

கோகுல் பிரசாத். Powered by Blogger.